Tuesday 16 December 2014

ஓடிப் போ! ஒடுக்கத்து புதனே!






உலகத்தில் தோன்றிய மதங்களிலேயே இஸ்லாமிய மார்க்கம் தனித்துவம் வாய்ந்ததாகும். மற்ற மதங்களில் இல்லாத ஏராளமான சிறப்புகள் இம்மார்க்கத்தில் நிறைந்துள்ளன. மற்ற மதங்களில் நிறைந்திருக்கும் மூடப்பழக்கங்கள் அறிவுக்கு ஒவ்வாத காரியங்கள் இஸ்லாத்தில் கிடையாது. அழகிய சட்டங்கள், அழகிய வழிகாட்டுதல்கள், அற்புதமான அறவுரைகள் என்று ஏராளமான சிறப்பம்சங்கள் நிறைந்து காணப்படுகிறது.

இஸ்லாம் தனி...த்து விளங்குவதற்கு இது போன்றவை முக்கிய காரணமாக திகழ்கிறது. ஆனால் இஸ்லாத்தை ஏற்றவர்கள் என்று தங்களை சொல்லிக் கொள்பவர்கள் செய்கின்ற காரியங்கள் இஸ்லாத்தையே மோசமாக நினைக்க வைக்கின்றது.

ஓரிறைக் கொள்கையை போதிக்கும் மார்க்கத்தில் தர்ஹா வழிபாடுகள், பகுத்தறியை பயன்படுத்த சொன்ன மார்க்கத்தில் மூடநம்பிக்கைள் என்று ஏராளமான காரியங்கள் இஸ்லாத்தைப் பற்றி மற்றவர்கள் தவறாக எண்ண தூண்டுகிறது.

குறிப்பாக மற்ற மதங்களின் செயல்பாடுகளில் பெரும்பான்மை மூடநம்பிக்கை அடிப்படையாக கொண்டவையாகும். மேலும் அவற்றின் செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்வதை மதங்கள் தடை செய்கின்றன. ஆனால் இஸ்லாம் மட்டும்தான் திருக்குர்ஆனின் கூற்றுகள் சரியா? தவறா? என்று ஆய்வு செய்து பாருங்கள் என்று கூறுகிறது. வேறு எந்த மதமும் தங்கள் வேதத்தை ஆய்வுக்கு உட்படுத்திப் பார்க்கச் சொல்லவில்லை.

அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா? (அல்குர்ஆன் 47:24)

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் 4:82)

திருக்குர்ஆனை ஆய்வு செய்யச் சொன்ன மார்க்கத்தில் மூடநம்பிக்கைகளை சிலர் உலாவிட்டுள்ளனர். பூனை குறுக்கால் வந்தால் ஆகாது, காக்கை கத்தினால் பணம் வரும் என்ற நம்பிக்கைகள் நிறைந்து காணப்படுகின்றன.

இதைப் போன்று ஸஃபர் மாதத்தை பீடை மாதமாக கருதி அம்மாதத்தில் நல்ல காரியங்கள் நடைபெறுவதையும் தடுத்துவருகின்றனர்.

நபி (ஸல்) அவர்களுக்கு நோய் வந்தது இந்த மாதத்தில்தானாம். மேலும் ஸஃபர் மாத்தின் கடைசி புதனில் ஏழு லட்சத்து எழுபதாயிரம் மூஸீபத்துக்கள் இறங்கிறதாம் எனவே ஸஃபர் மாதத்தின் கடைசி புதனில் சில அரபி வார்த்தைகளை மாவிலையில் எழுதி கரைத்து குடித்து முஸீபத்துகளை (துன்பங்களை) காலி செய்கிறார்களாம். இன்னும் சிலர் கடலில் போய் குளித்து முஸீபத்துகளை போக்கிறார்கள்! இந்த மூடநம்பிக்கை இன்னும் பலரிடம் காணப்படுகின்றது.

நபி (ஸல்) அவர்களுக்கு நோய் ஏற்பட்ட கிழமை எது என்பதில் ஆதாரப்பூர்வமான சான்றுகள் இல்லை. சிலர் புதன் என்றும் சிலர் திங்கள் என்றும் சிலர் சனி என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

நபி (ஸல்) அவர்களுக்கு புதனில்தான் நோய் ஏற்பட்டது என்று வைத்துக் கொண்டாலும் அந்த நாளை பீடை நாளாக முடிவு செய்ய என்ன ஆதாரம் உள்ளது?

மேலும் இவர்கள் மாவிலையில் எழுதியிருக்கும் வாசகத்தின் பொருள் என்ன என்பதை சிந்தித்தால்தால் கூட இதற்கு துன்பங்கள் நீங்குவதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை விளங்கலாம்.

அகிலங்கள் எங்கும் நூஹ் மீது ஸலாம் உண்டாவதாக!

இப்ராஹீம் மீது ஸலாம் உண்டாவதாக!

மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் ஸலாம் உண்டாவதாக!

இல்யாஸீன் மீது ஸலாம் உண்டாவதாக!

இந்த வாசங்களைத் தான் அரபியில் எழுதி கரைத்து குடிக்கிறார்கள்.

இதற்கும் நோய் நிவாரணத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது? என்பதை சிந்தித்துப் பார்க்கட்டும்!

நாட்கள் அனைத்தும் அல்லாஹ்வால் வழங்கப்பட்டது. இதில் நல்ல நாட்கள், கெட்டநாட்கள் என்று பிரிப்பதற்கு மனிதர்களுக்கு உரிமை கிடையாது. இவ்வாறு செய்பவர்கள் அல்லாஹ்வையே நோவினை செய்பவர்கள்.

" ஆதமின் மகன் என்னைப் புண்படுத்துகிறான். அவன் காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்); என்கையிலேயே அதிகாரம் உள்ளது; நானே இரவு பகலை மாறி மாறி வரச் செய்கிறேன் என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் :புகாரீ (4826), முஸ்லிம் (4166)

அறியாமை காலத்தில் வாழ்ந்தவர்கள்தான் இது நல்ல காலம், இது கெட்ட காலம், இது நல்ல நாள், இது கெட்ட நாள் என்று கூறி நல்ல காரியங்களை செய்வதற்கு காலத்தை தேர்வு செய்து வந்தனர். இந்த மூட நம்பிக்கை ஒழிப்பதற்கே மேற்கூறிய செய்தியை நபிகளார் கூறியுள்ளார்கள்.

அறியாமை கால மக்கள், "இரவும் பகலும்தான் நம்மை அழிக்கிறது, அவைதான் நம்மை அழிக்கிறது,
மரணிக்கவைக்கிறது, வாழச் செய்கிறது'' என்று கூறிவந்தார்கள்.

இது தொடர்பாக அல்லாஹ் தன் திருமறையில் "நமது இவ்வுலக வாழ்வைத் தவிர வேறு இல்லை. மரணிக்கிறோம்.
வாழ்கிறோம். காலத்தைத் தவிர வேறு எதுவும் எங்களை அழிப்பதில்லை'' எனக் கூறுகின்றனர் (45:24).

இது போன்ற அறியாமைகாலத்தில் நடந்தவை அனைத்தையும் ஒழித்த நபி (ஸல்) அவர்கள் காட்டிய இஸ்லாத்திலேயே மூடநம்பிக்கைகளை சிலர் புகுத்தி இருப்பதும் அதை முஸ்லிம்கள் பின்பற்றுவதும் ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.
அறியாமை காலத்தில் நடந்த மூடபழக்கங்கள் அனைத்தையும் காலில் போட்டு மிதித்து இல்லாமல் ஆக்கிவிட்டு நபி (ஸல்) அவர்கள் போய் உள்ளார்கள். அவர்கள் ஆற்றிய இறுதிப் பேருரையில் இந்த செய்தியையும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

"அறிந்து கொள்ளுங்கள்! அறியாமை காலத்தின் அனைத்து காரியங்களும் என் பாதங்களுக்குக் கீழே புதைக்கப்பட்டவையாகும்'' (நூல் : முஸ்லிம் 2334)

இவ்வளவு தெளிவாக நபி (ஸல்) அவர்கள் கூறிய பிறகும் ஒடுக்கத்து புதன் என்ற பெயரில் அறியாமை காரியத்தை அரங்கேற்றுபவர்களை என்னவென்று சொல்வது?

நோய்கள் வந்தால் என்ன செய்யவேண்டும் என்று அழகிய வழிகாட்டுதல்களை நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். முதலில் படைத்தவனிடம் முறையிடுங்கள், அதன் பிறகு அவன் உங்கள் மூலம் உருவாக்கிய மருந்துகளை உட்கொள்ளுங்கள்! இறைவனின் உதவியால் நோய் நிவாரணம் பெறுவீர்கள்!

நபி (ஸல்) அவர்கள் நோயாளிடம் சென்றாலோ அல்லது நோயாளி கொண்டு வரப்பட்டாலோ "அத்ஹிபில் பஃஸ ரப்பன்னாஸ். இஷ்ஃபீ வ அன்த்தஷ் ஷாஃபீ லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாவு(க்)க ஷிஃபாஅன் லா யுகாதிரு ஸகமா'' (மனிதர்களின் இறைவா! நோயின் கஷ்டத்தை போக்கி விடுவாயாக! நீயே நிவாரணம் அளிப்பவன்! உன் நிவாரணத்தை தவிர வேறு நிவாரணம் இல்லை! எந்த ஒரு நோயையும் விட்டுவைக்காத நிவாரணத்தை அளிப்பாயாக!) என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர் :ஆயிஷா (ரலி), நூல் : புகாரீ (5675)

எந்த நோயுக்கும் அல்லாஹ் அதற்கான மருந்தை இறக்காமல் அதை கொடுக்கவில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரீ (5678)

"ஒவ்வொரு நோயுக்கும் மருந்துண்டு, நோயை மருந்து அடைந்தால் அல்லாஹ்வின் அனுதியுடன் நோய் நீங்கிவிடும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம் 4084)
நோய்கள், துன்பங்கள் ஏற்படும் போது எவ்வாறு அறிவுப்பூர்வாக செயல்பட இஸ்லாம் கட்டளையிட்டுள்ளதோ அதை பின்பற்றி மூடநம்பிக்கை துடைத்தெரிந்து நபிவழியைப் பின்பற்றி நடக்கும் வாய்ப்பை நாம் பெறுவோமாக!
சகோ :கோவை ரஹ்மத்துல்லாஹ்  அவர்களின் முகநூல் பதிவிலிருந்து 

No comments:

Post a Comment